உம்பளச்சேரி மாடுகள்..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 11:08:55

உம்பளச்சேரி மாடு :-

என்பது தமிழ்நாட்டில் நாகைதிருவாரூர்தஞ்சை மாவட்டங்களில் காணப்படும் மாடுகளின் ஒரு இனமாகும். இவை குட்டையானவை என்றாலும். இதன் கால்கள் உறுதியானவை, ஆழமான சேற்றில் இறங்கி நன்கு உழக்கூடியவை.

பெயரியல்:-

நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த உம்பளச்சேரி ஊராட்சியின் பெயரைக்கொண்டு இவ்வகை மாடுகள் உம்பளச்சேரி மாடுகள் என அழைக்கப்படுகின்றன. நாகைதிருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப் பகுதியில் உள்ள உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல் வகைகளை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் உப்பளச்சேரி மருவி உம்பளச்சேரி எனப் பெயர் பெற்றது.

விளக்கம்:-

இந்த மாடு பிறக்கும்போது சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. முகம், கால், வால் பகுதிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். உம்பளச்சேரி இளம் காளைகளின் கொம்பைத் தீய்க்கும் அல்லது வெட்டும் பழக்கம் இருக்கிறது. காங்கேயம் காளைகளை உள்ளூர் நாட்டுப் பசுக்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் உம்பளச்சேரி என்ற தனி மாட்டினம் உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம்.

பசுக்கள்:-

இந்த இனப் பசுக்கள் 2.5 லிட்டர் வரை குறைந்த அளவே பால் கறந்த போதிலும், இதன் பால் கெட்டித்தன்மையும் நோய் எதிர்ப்பு சக்தியும் வாயந்ததாகும். முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடைக்காது என்ற காளமேகப்புலவரின் பாடல் வரிகள் மூலமாக உம்பளச்சேரியின் பெருமையினை அறிந்துகொள்ளலாம்.

காளை:-

இந்த இனக் காளைகள் காவிரி கழிமுகத்து எதிர்நிலப் பகுதியில் உள்ள கடுஞ்சேற்றிலும் குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும், 2500 கிலோ கொண்ட பாரத்தை சுமார் 20 கிமீ தூரம் வரை அனாயசமாக இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை.

மாற்றுப் பெயர்கள்:-

உம்பளச்சேரி இனக் காளைகள் தெற்கத்தி மாடு, மோழை மாடு, மொட்டை மாடு, தஞ்சாவூர் மாடு என்றும், பசுக்கள் ஆட்டுக்காரி மாடு, வெண்ணாமாடு, சூரியங்காட்டுமாடு, கணபதியான்மாடு எனவும் காரணப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

காக்கும் முயற்சிகள்:-

இந்த உம்பளச்சேரி மாட்டினத்தை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருவாரூர் மாவட்டம், கொருக்கையில் மாவட்ட கால்நடை பண்ணை நடத்தப்பட்டுவருகிறது.

இந்த இனக் காளைகள் காவிரி கழிமுகத்து எதிர்நிலப் பகுதியில் உள்ள கடுஞ்சேற்றிலும் குறைந்த உணவுடன் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உழவு செய்யும் ஆற்றல் மிக்கவை. மேலும், 2500 கிலோ கொண்ட பாரத்தை சுமார் 20 கிமீ தூரம் வரை அனாயசமாக இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவை.

பசுக்களின் இருப்பிடப் பராமரிப்பு:-

  1. தரையில் நீர் தேங்கினால் பசுக்களுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும்.
  2. தரையில் பள்ளங்கள் இருந்தால் அவற்றினை மூடி சரிசெய்ய வேண்டும். தரையின் ஈரத்தை உறிஞ்சச் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தரையின் மீது தெளித்து விடவும்.
  3. மழைச்சாரல் மற்றும் கூரைமீது விழும் மழைநீர் கொட்டகையினுள் வராமல் இருக்கக் கூரையின் விளிம்புகள் 75-90 செ.மீ வெளியே நீண்டு இருக்குமாறு அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் பிளாஸ்டிக் திரைச் சீலைகளைப் பக்க வாட்டில் கட்டி விடலாம். மழைநீர் கொட்டகையினுள் வராமல் பாதுகாக்கலாம்.
  4. கூரையில் ஒட்டைகள் இருப்பின் மழைக்காலத்தின் முன்பே அதனை 'தார் சீட் போன்றவற்றைக் கொண்டு அடைத்து விட வேண்டும்.
  5. கொட்டகையினைச் சுற்றி மழைநீர் தேங்காமல் வடிந்து விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்கினால் கொசு மற்றும் ஒட்டுண்ணிகள் பெருகும் இடங்களாகிப் பசுக்களைப் பாதிக்கும்.

கன்றுப் பராமரிப்பு:-

மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகள் ஈரப்பதம் மற்றும் குளிரினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே மழைக்காலத்தில் கன்றுகளை நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் கன்றுகள் கதகதப்பான சூழலில் இருக்குமாறு செய்ய வேண்டும். தரையில் வைக்கோல் பரப்புதல், பக்கவாட்டில் குளிர் தாக்கம் ஏற்படாமல் இருக்கக் கோணிப்பைகளைக் கட்டுதல், இரவு நேரத்தில் கன்றுகளின் மேலே மின்பல்புகளைத் தொங்க விடுதல், கன்றுகளுக்குச் சாம்பிராணி புகைமூட்டம் போடுதல் போன்ற பராமரிப்புச் செயல்கள் கன்றுகளுக்கு நன்மை பயக்கும். கன்றுகளுக்குச் சத்தான தீவனம் அளித்து வருவது நன்று. இரத்தக் கழிசல் (காக்சிடியோசிஸ்) தடுப்பு மருந்துகளைக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கவும்.

நோய்த் தடுப்பு முறைகள்:-

கால்நடைகளைத் தாக்கும் பெரும்பாலான நோய்களின் கிளர்ச்சி மழைக்காலத்தில் தான் அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் வரும் நோய்களைத் தடுக்கப் பருவமழை தொடங்கும் முன்னரே உரிய தடுப்பூசிகளைக் கறவை மாடுகளுக்குப் போட வேண்டும். கோமாரி, சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோய்க்கு மழைக்காலம் தொடங்கும் முன்னர் கால்நடை மருத்துவரை அணுகித் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். ஏரி, குளம், குட்டைகளில் தண்ணி குடிக்கும் மாடுகளுக்கும் இவற்றைச் சுற்றி மேயும் மாடுகளுக்கும் தட்டைப் புழுவிற்கான குடற்புழு நீக்க மருந்தினைப் பருவ மழை தொடங்கும் முன்பு கொடுக்க வேண்டும்.

பசுக்களைப் பாதுகாத்தல்:-

மழைக்காலத்தில் இடி மற்றும் மின்னல் ஏற்படுவது உண்டு. இடிதாக்கி மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு நேரிடுகிறது. இடி மின்னலின் போது கால்நடைகளைத் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இடியுடன் கூடிய மழையின் பொழுது பசுக்களை மரத்திற்குக் கீழே ஓட்டிச் செல்லக் கூடாது. மேய்க்க வரும் மரத்தின் அடியில் அடைக்கலம் தேடக் கூடாது. பனைமரம் மற்றும் தென்னைமரங்களுக்கு அடியில் செல்வது ஆபத்தைக் கூட்டும். இடி மின்னலின் போது செல்போன் கோபுரங்கள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், உயர் அழுத்த மின்சார உயர் வழித்தடங்கள் ஆகியவற்றின் கீழ் மாடுகள் சென்று மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மின்னலின் போது பொதுவாக மரங்களுக்கு 10 அடிக்கு அப்பால் கால்நடைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இடி மின்னல் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் கொட்டகையைச் சுற்றி 10 அடி தூரத்தினுள் மரங்களை நடக்கூடாது.