வறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-07-06 07:34:32

ஜான்:-

     ”நான் எம்.சி.ஏ பட்டதாரி. என் குடும்பத்துக்கு இருந்த கடனுக்காக எங்க அப்பா விவசாய நிலத்தை வித்துட்டார். இயற்கை விவசாயம் செய்யணும்னுதான் ஆசை. நிலம் இல்லையேங்கற ஏக்கம் இருக்கத்தான் செஞ்சது. அப்புறம் கொஞ்சம் நிலம் வாங்கினோம். அதுலயும் பெரிசா ஒண்ணும் பயிர்வெக்கலை. கடந்த சில வருஷமா இருந்த வறட்சிதான் அதுக்குக் காரணம். எப்படியாவது இயற்கை விவசாயம் செய்யணும்கிறதுல குறியா இருந்தேன்.

அப்போது புகை:-

     என் வீட்டுல போர்வெல் போட்டாங்க. முதல்ல போட்ட போர்வெல்லுல தண்ணி வரலை. போன வருஷம் ஜூலை மாசம் அதுக்குப் பக்கத்துலேயே இன்னொரு போர்வெல்லும் போட்டாங்க. முதல்ல முந்நூறு அடிவரைக்கும் போட்டாங்க, தண்ணி வரலை, வெறும் புகைதான் வந்துச்சு. அதனால அப்பா ‘இதோட நிறுத்துங்க’னு சொன்னார். நான்தான் அடம் பிடிச்சு 510 அடிவரைக்கும் போர் போடவெச்சேன். அப்புறமா ஒரு 50 அடிக்குத் தண்ணீர் இருந்தது.

      இந்தத் தண்ணியை எடுத்துட்டா, உள்ளே தண்ணி இருக்காது. இந்த போர்வெல் வீணாப்போயிடும்’னு போர்வெல்காரர் சொன்னார்.

      ஆனா, மறுபடியும் இதுல தண்னீர் வரவைக்க முடியும்னு நான் நம்பினேன்.

இப்போது தண்ணீர்:-

     நம்மாழ்வார் பத்தின காணொலிகளை அடிக்கடி பார்ப்பேன். அந்த வகையில எனக்கு நீரியல் வல்லுநர் பிரிட்டோராஜின் ‘வறண்ட ஆழ்துளைக் கிணற்றை மீட்கும் முறை’ குறித்த வீடியோ கிடைச்சது. அதையும் முழுசா பார்த்தேன்.

     மழைக்காலங்கள்ல எங்க மொட்டை மாடியில விழும் தண்ணியை போர்வெல்லில் விழற மாதிரி செஞ்சேன், என்றவர் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பைப் பற்றிச் சொன்னார்.

      போர்வெல்லுல இருந்து மூணடி தூரத்துல எட்டடி நீளம், எட்டடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவுல குழி எடுத்தேன். அந்தக் குழியோட அடிப்பாகத்துல ரெண்டடிக்குச் சின்னக்கண் கொண்ட துளைகள் அமைச்சு, அதைச் சுற்றி கொசுவலையைக் கட்டினேன். பிறகு, குழியில மூணடி உயரத்துக்குக் கூழாங்கற்களையும், பக்கத்துல இருந்த சின்னக் கற்களையும் கொட்டி நிரப்பினேன்.

     மாடியில இருந்து விழற மழைநீரை இந்தக் குழிக்குள்ள விழற மாதிரி செஞ்சேன். மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு, போர்வெல்லுக்குள் தண்ணி விழ ஆரம்பிச்சது. பிறகு முதல் மழை கிடைச்சதும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணியை 2 ஹெச்.பி மோட்டார் மூலம் வெளியே எடுத்தோம்.

      செம்மண் பூமியாக இருந்ததால சிவப்பு நிறத்தில தண்ணி வெளியே வந்துச்சு. அதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். ஒரு வாரம் கழிச்சு நல்ல தண்ணி கிடைக்க ஆரம்பிச்சது. கிணற்றில் கயிற்றைக் கட்டி அளவு பார்த்தோம். சுமார் 150 அடி ஆழத்துக்குத் தண்ணி இருந்துச்சு. அந்த தண்ணியை வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திட்டு வர்றோம்.

     ஆரம்பகாலத்துல என்னைத் திட்டினவங்க எல்லாரும் இப்போ பாராட்டுறாங்க. பக்கத்துல இருக்குறவங்க இங்கே வந்து தண்ணி பிடிச்சிட்டு போறாங்க.

      இதுக்கெல்லாம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பின்பற்ற ஆரம்பிச்சதுதான் காரணம். கூடவே பிரிட்டோ சாருக்கும் நன்றி என்றபடி விடைகொடுத்தார் ஜான்.