பலன் தரும் பனிவரகு..!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-22 10:58:40

இரகங்கள்:-

வரகு ரகங்கள் - கோ 3, ஏபிகே 1, சாமை ரகங்கள் - கோ 2, கோ 3, பனிவரகு ரகங்கள் - கோ 3, கோ 4.

பட்டம்:-

மேற்கண்ட பயிர்கள் ஆடி, புரட்டாசிப் பட்டத்தில் மானாவாரியாக பயிரிட ஏற்றது.

நிலம் தயாரித்தல்:-

செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

கோடை உழவினால் மண் அரிமானம் தடுக்கப்பட்ட மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்:-

வறட்சியைத் தாங்கி வளர, விதைகளை கடினப்படுத்தி பின்பு விதைக்க வேண்டும்.

ஒரு சதவீதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் உரம்) விதைகளை 6 மணிநேரம் ஊரவைத்து நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி:-

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ், ப்ளோரசன்ஸ் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் அல்லது டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்றளவில் நன்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும்.

நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி:-

அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிரை விதையுடன் கலந்து இடுவதால் 25 சதவீதம் தழைச்சத்தை சேமிக்கலாம்.

ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 600 கிராம் (3 பாக்கெட்கள்) அசோஸ்பைரில்லம் அல்லது அசோபாஸ் நுண்ணுயிர் கலவையை குளிர்ந்த அல்லது அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும்.

இவ்வாறு கலந்த விதைகளை 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதையும் விதைப்பும்: கை விதைப்பு அல்லது விதைப்பான் அல்லது கொர்ரு கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யலாம்.

இப்படி செய்வதால் அதிகப் பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதையை விதைத்து முடிக்கலாம்.

உரமிடல்: ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பிய பிறகு நிலத்தை உழ வேண்டும்.

பின்னர் 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின்போது அடியுரமாக இட வேண்டும்.

மேலுரமாக 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20 - 25 நாள்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி இட வேண்டும். நுண்ணூட்டச் சத்துக் கலவையை 12.5 கிலோ அளவில் மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராகத் தூவ வேண்டும்.

தூவப்பட்ட உரத்தை நிலத்துடன் கலக்கக் கூடாது.

களை நிர்வாகம்:-

சிறுதானியப் பயிர்களில், விதைத்த 3-ஆம் நாள் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை ஹெக்டேருக்கு 750 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்.

நிலத்தில் தெளிக்கும்போது போதியளவு ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்பு விதைத்த 20 - 25 நாள்களில் ஒரு இடை உழவு அல்லது கைக் களை எடுக்க வேண்டும்.

பயிர் களைத்தல்:-

விதைத்த 18 - 20-ஆம் நாளில் செடிகளை களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:-

இந்தப் பயிர்களில் பொதுவாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை:-

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து, அடித்து பின் விதைகளைப் பிரித்தல் வேண்டும்.

கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை இரண்டு முறை செய்யலாம்.

கதிர்களை களத்தில் நன்கு காயவைத்து தானியங்களை அடித்துப் பிரித்து தூய்மைப்படுத்தி சேமிக்கலாம்.

தானியங்களைப் பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.

சத்துக்கள்:-

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும். சருமத்தை மினுமினுக்க வைக்கும். நரை, மூப்பை தள்ளிப்போடும். எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தை பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். கல்லீரல் கற்களை கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு குறைபாடுகளை போக்கும்.

அலர்ஜியை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு திறன் அதிகம். அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்களை விரைவில் ஆற்றும். உடல் பருமனை குறைக்கும். மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதால் கர்பிணி பெண்களுக்கு ஏற்றது. மன உளைச்சலை குறைக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை போக்கும்.