குறைந்த பராமரிப்பில் அதிக வருமானம்... ஒப்பில்லாத ஓங்கோல் மாடுகள்!

KARTHIKEYAN RKB
Member
Joined: 2020-06-02 05:16:23
2020-06-24 10:20:39

சுக்களானாலும் சரி, காளை களானாலும் சரி... நாட்டு மாடுகள் என்றாலே கம்பீரம்தான். அந்த வரிசையில் மிகவும் கம்பீரமானவை, ஆந்திராவைச்  சேர்ந்த ஓங்கோல் ரக மாடுகள். தென் மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் நந்தி சிலைகள், ஓங்கோல் காளைகளின் வடிவத்தில்தான் செதுக்கப்பட்டிருக்கும். கவர்ச்சி, மிடுக்கான தோற்றம்... என அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், உழைப்பதற்கும் சளைத்தவை இல்லை இந்த ரக மாடுகள். மற்ற நாட்டு மாடுகளை விட சற்று அதிகமாகவே பால் கொடுக்கும் திறனும் கொண்டவை இவை. இவற்றின் பால், நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்திருப்பதால், இந்த ரக மாடுகளுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருகிறது.

 
டிராக்டரை ஓரம் கட்டிய ஓங்கோல்:-
 

ஆந்திர கடலோரப் பகுதியில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் ‘ஓங்கோல்’ என்ற ஊர் உள்ளது. இப்பகுதியில் ஓங்கோல் மாடுகளைத்தான் உழவுக்குப் பயன்படுத்துவார்கள். இம்மாடுகள் நீண்ட நேரம் உழைக்கக்கூடியவை. ஒரு கலப்பையிலேயே 4 கொழுக்களைப் பொருத்தி இம்மாடுகளால் இழுக்க முடியும். அவ்வளவு பலம் வாய்ந்தவை இவை. அதனால்தான் ஓங்கோல் மாடுகளை உழவுக்குப் பழக்கப்படுத்தி வருகிறேன். இயற்கை விவசாயத்துக்கு மாறிய பிறகு, டிராக்டரை விற்பனை செய்து விட்டேன். தற்போது நாட்டு மாடுகள் மூலமாகத்தான் உழவு செய்து வருகிறேன். மாடுகளின் சாணம், சிறுநீரை சேமித்து ஜீவாமிர்தம், நீம் அஸ்திரா ஆகியவற்றை தயார் செய்து பயன்படுத்தி வருகிறேன். அதனால் பண்ணையில் ரசாயன உரங்களுக்கான செலவு மிச்சமாகி விட்டது.

மேய்ச்சல்தான் பிரதானம்:-

“பராமரிப்பைப் பொறுத்து... ஒரு ஓங்கோல் மாடு ஒரு வேளைக்கு இரண்டு லிட்டர் முதல் மூன்றரை லிட்டர் வரை பால் கொடுக்கும். நாட்டு மாட்டுப் பாலுக்கு தனியாக சந்தை வாய்ப்பு எதுவும் கிடையாது.

4 ஆயிரம் ஆண்டு பழமையான ஓங்கோல் மாடுகள்:-

பெங்களூருவிலுள்ள தேசிய பால்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானியாகப் பதவி வகித்து தற்போது ஓய்வு பெற்றிருக்கும் ஓபி ரெட்டி, ஓங்கோல் மாடுகள் பற்றிச் சொன்ன விஷயங்கள் இங்கே...

“ஆந்திராவின் பெருமை இந்த ஓங்கோல் மாடுகள். சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளாக இந்த மாடுகள், தமிழக எல்லை மற்றும் ஆந்திர மண்ணில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 1875-ம் ஆண்டில் பிரேசில் நாடு, இந்த மாடுகளின் சிறப்புகள் தெரிந்து, கப்பல் மூலம் இந்தியாவிலிருந்து கொண்டு சென்றது. அதன் பிறகு அமெரிக்காவும் இந்த மாடுகளை இறக்குமதி செய்தது. 1961-62ம் ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓங்கோல் காளைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, தென் அமெரிக்க நாடுகளில் பெருமளவில் இனவிருத்தி செய்யப்பட்டன. அங்கு உழவு வேலைகளுக்கும், பால் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதேபோன்று கிர் என்ற இந்திய மாட்டினமும் பால் தேவைக்காக பிரேசிலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை தென் அமெரிக்க நாடுகள் எந்தவித அனுமதியும் பெறாமல், சட்ட விரோதமாகத்தான்  நம் காளைகளைக் கொண்டு சென்று இனவிருத்தி செய்திருக்கின்றன.

ஓங்கோல் மாடுகளை செயற்கைக் கருவூட்டல் செய்வதற்கான உறைவிந்தணுக் குச்சிகள்  குண்டூர் கால்நடைப் பண்ணையில் (லேண்ட் ஃபார்ம்) கிடைக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள கால்நடைப் பராமரிப்பு மையங்களிலும் இவை கிடைக்கும்.

பலமனேர் கால்நடைப் பண்ணையில் புங்கனூர் ரக மாடுகளின் செயற்கைக் கருவூட்டல் ஊசிகள் கிடைக்கும்” என்றார், ஓபி ரெட்டி.

ஒரிஜினல் ஓங்கோல் மாடுகளைக் கண்டறியும் விதம்:-

விஜயவாடாவை அடுத்த மங்களகிரியைச்  சேர்ந்த சாய்பாபு, “ஓங்கோல் மாடுகள் வெள்ளை, செம்பழுப்பு, கறுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். ஓங்கோல் மாட்டின் காதுகளின் பின்புறமும், கால், ஆசனவாய்ப்பகுதிகள் கறுப்பாக இருக்கும். திரட்சியான திமில், தாடையில் தொங்கும் தோல், மேல்நோக்கி இருக்கும் சிறிய கொம்பு ஆகியவை ஓங்கோல் மாடுகளின் அடையாளங்கள். பொதுவாக, இம் மாடுகளில் பாய்ச்சல் தன்மை குறைவாகத்தான் இருக்கும். சில காளைகள் மட்டுமே பாய்ச்சல் தன்மை கொண்டுள்ளன. பண்ணையிலோ, வீடுகளிலோ வளர்ப்பதற்கு ஏற்றவை, இந்த ஓங்கோல் மாடுகள்” என்கிறார்.

வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் ஓங்கோல் மாடுகள்:-

பிரேசில், இந்தியாவில் இருந்து இந்த ரக மாடுகளை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டில் வளர்த்து வருகிறது. பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் மட்டும்  பல லட்சம் ஓங்கோல் மாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்திய அளவில் இந்த மாடுகள் தற்போது ஒரு லட்சம் எண்ணிக்கை அளவில்தான் உள்ளன. தற்போது தேசிய பல்லுயிரிச் சட்டம் அமலில் இருப்பதால், இந்தியாவில் இருந்து ஓங்கோல் மாடுகளின் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது 5 ஆயிரம் யூனிட் விந்தணுக்களுக்கான அனுமதி கோரி, சென்னை தேசிய பல்லுயிரி ஆணையத்திடம் பிரேசில் நாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். நமது பெருமையை வெளிநாட்டினர் உணர்ந்த அளவுக்குக் கூட நாம் உணரவில்லை என்பதுதான் வேதனை.